தொடரும் இனவழிப்பு இராணுவ அடக்குமுறை

0

அன்பார்ந்த தமிழீழ மக்களே!

தமிழீழத்தின் யாழ் பல்கலைக்கழகம் என்பது தமிழினத்தின் வரலாற்றின் தேசிய எழுச்சிக்கான சனநாயகத்தின் தூணாக பல ஆண்டுகளாக நிமிர்ந்து நிற்கும் கல்விசார் வளாகமாகும். எனவேதான் தம்மால் நிகழ்த்தப்பட்ட நிகழ்த்தப்பட்டு வருகின்ற மிகக்கோரமான இனப்படு கொலையை அனைத்துலகத்தின் உயர் தளங்களுக்கு தாங்கிச் செல்லும் வலுவான ஆயுதமாகவும் நீதிக்கான போராட்டத்தின் கருவியாகவும் யாழ் பல்கலைக்கழக வளாகமானது செயற்படுவதைப் புரிந்து கொண்ட சிங்களதேசம் தனது படைவலுவை ஆயுதம் தாங்கி அரணமைத்து, தனது முகவர்க;டாக பல்கலைக் கழகத்திலுள்ள தேசிய நினைவு அடையாளங்களை அழித்தொழித்திருக்கின்றது.

இவ் இனத்துவேச நிகழ்வென்பது உலகத் தமிழ் மக்களிடம் சிங்கள தேசத்தின் மேல் அதி உச்ச வெறுப்பையும் கடும்
கோபக்கனலையும் உருவாக்கி இருக்கிறது. சிங்கள தேசமும் மாறி மாறி ஆட்சி அமரும் இனவாதிகளும் ஒருபோதும் எமக்கான உரிமையை அங்கீகரிக்கப் போவதில்லை என்ற பட்டறிவில் தான் இனப்படு கொலைக்கான சர்வதேச நீதியையும் தமிழீழ தேசத்திற்கான அங்கீகாரத்தையும் வேண்டி நாம் போராடிவருகின்றோம். எமது நீதிக்கான போராட்டத்தை உலகம் ஏற்கும் நிலை நோக்கிய மிகத் தீவிரமான போராட்ட அரசியலைத் தமிழ் மக்களாகிய நாம் அணிதிரண்டு நகர்த்துவோம் என்ற திட சங்கற்பத்தையேற்று போராட்டக்களத்தை அனைத்துலக ரீதியாக ஒருங்கிணைத்து செயல் வடிவம் கொடுத்து வருகின்றோம்.

அனைத்துலக ரீதியாக கட்டமைக்கப்பட்ட எமது அமைப்பானது தமிழீழ தேச விடுதலைக்கான செயற் திட்டங்களை வகுத்து அனைத்து நாடுகளிலும் மிகத் தீவிரமாக செயற்படுத்தி வருகின்றது. பிரித்தானியாவிலும் இன்றைய சமகால நிலையை கருத்திற் கொண்டு எமது செயற் திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

எமது இளைய சமூகமே!
தமிழ்த் தேசிய இனம் எமது தாயகத்தில் முற்றாக சிங்கள தேசத்தால் நிர்மூலமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
இவ் வேளையில் உங்களிடம் இருக்கும் ஆளுமைகளை பலமாக்கி உலக அரங்கை நோக்கி வீச்சோடு போராட அணி திரண்டு வாருங்கள். நெஞ்சு கனத்த உணர்வோடு போராட்டக் களத்தை சிங்களதேச இனப்படுகொலை
அரசிற்கெதிராக உலக சனநாயக பரப்பில் சமரசமற்று முன்நகர்த்தி நாம் தொடர்ந்து போராடுவோம்.

– தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் –

SHARE