சிறிலங்கா சுதந்திர தினத்தை எதிர்த்து லண்டனில் போராட்டம்.

0

 

 

இலங்கையின் சுதந்திரதின நிகழ்வை எதிர்த்து தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தியும் லண்டன் ஶ்ரீ லங்கா உயர் ஆணையகம் முன்பாக பல நூற்றுக்கணக்கான புலம் பெயர் தமிழர்கள் ஒன்று கூடி போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

ஈழத்தமிழர்கள் இலங்கை சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் இன்று வரையில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் எம் மக்களும் காலாதி காலமாக நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கின்ற போதும் எமது மக்களின் போராட்டங்களை யாருமே கண்டு கொள்ளாத நிலையிலே விரக்தியின் விளிம்பில் நின்று இலங்கையின் சுதந்திரத்தினை எதிர்த்து எமது உறவுகள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

 

இலங்கை ஐரோப்பியரின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்டு 72 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற போதும் ஈழத்தமிழர்களாகிய நாம் தொடர்ந்தும் காலணித்துவ ஆட்சி ஒன்றின் கீழே அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆண்ட பரம்பரையான நாம் அடங்கி ஒடுங்கிப் போய் இன்னொரு தேசத்தவரினால் அடக்கியாளப்படுவதனை நாம் விரும்பவில்லை.

எமது மண்ணில் நாம் சுதந்திரமாக வாழ்வதற்கு எமது தாயக மண்ணிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும். மக்கள் தமது சொந்த நிலங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலான திட்டமிட்ட குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலை கண்டறியப்பட வேண்டும். நீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். தமிழர் தாயகத்தில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும். இத்தகைய அடிப்படையான அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுக்கான சர்வதேச அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.
சர்வதேசம் தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயத் தன்மையினை புரிந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்தும் பதாககைகளை எந்த்தியும் கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழர் ஒருங்கிணைப்பு குழு – பிரித்தானியா

SHARE