கண்ணீர் வணக்கம்

0

தமிழினம் சார்ந்தியங்கிய சமூகப் போராளி சிறிதரன் அவர்கள்!

எமது இனத்தின் விடுதலைக்காக எண்ணற்ற தேச உணர்வாளர்களை காலம் பிரசவித்திருக்கிறது. இதன் வழியில் சிறி அண்ணா அவர்கள் போராட்ட வரலாறு என்பது தமிழ்ச் சமூகத்தின் மேன்மை கொண்ட பணியைத் தனது வாழ்வியலில் ஏற்று தன் இறு‌தி மூச்சுவரை பயணித்த உன்னதமான சமூக நலவாதியாவார். தமிழ்ச் சமூகத்தின் கல்வியாளனாக பயணித்த ஒருவர் தான் சார்ந்த இனத்தின் மீது சிங்கள அரச இராணுவ அடக்கு முறை தீவிரம் கொண்டபோது களப் போராளியாக தன்னை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டு அன்றைய கால போராட்ட சூழமைவிற்கேற்ப தாயகத்திலும், தமிழகத்திலும் தலைவரின் வழி காட்டுதலையேற்று அரசியற் பணியாற்றிய உறுதியான நம்பிக்கைக்குரிய போராளியாக விளங்கினார். தமிழீழத் தனியரசின் கட்டுமானக் கட்டமைப்பில் ஒரு அங்கமான தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் வளர்ச்சியின் பரிமாணமாக மாறி தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனமாகச் செயற்பட்டு பொருளாதார தடைகளை தகர்க்கும் செயற்பாட்டில் காத்திரமான பங்கினை சிறி அண்ணா அவர்கள் வழங்கியிருந்தார்.

எங்கு வாழ்ந்தாலும் இனத்தின் நலன் சார்ந்து இயங்க வேண்டுமென்ற பேரார்வம் கொண்டவர் சிறி அண்ணா அவர்கள். போர் உச்சம் பெற்ற வேளை பிரித்தானியா வந்திறங்கிய ஈழத் தமிழர்களின் நலன் பேண் அமைப்பாக TR TEC என்ற நிறுவனத்தை தேசப் பணியாளர்களோடு இணைந்து நிறுவி ஆயிரக்கணக்கான தமிழ் இளையோர் உள்ளடங்கிய அனைவருக்கும் கணினி, ஆங்கில அறிவுகளையும் இதர சேவைகளையும் வழங்கி இவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய பெருந்தகையாவார்.

அன்பும் பண்பும் மனிதநேயமும் தான் இவரை TR TEC சிறி மாஸ்ரர் என்றால் அனைவரும் அறிந்த பெயருக்குரியவராக மாற்றியது. தமிழீழம் தனித்துவமான தனி அரசுக்கான கட்டுமானங்களோடு விரிவாக்கம் கண்டு இயங்கிய நிலையில் உலகியல் மாறிவரும் தொழினுட்ப அணுகுமுறைக்கேற்ப எமது தேசத்தை தகவமைக்கும் நோக்கில் கிளிநொச்சியில்TR TEC நிறுவனத்தை நிறுவி கற்கை நெறியை தமிழீழ மாவட்டங்களில் விரிவாக்கம் செய்து செயற்படுத்தினார். தமிழர் தேசம் தலை நிமிர்ந்து நின்ற காலத்தில் இந் நிறுவனம் தனித்துவமான அடையாளத்துடன் தமிழ் மக்களுக்கு ஆற்றிய பணி போற்றுதற்குரியது. 2009ற்குப் பின்னான காலப்பகுதியிலும் தான் பற்றுக் கொண்ட இலட்சியத்தில் உறுதியாகவும் தான் நேசித்த மக்களின் சமூக உயர்வு நோக்கிய போராட்டப் பணியில் உறுதியாகப் பயணித்தவர் சிறி அண்ணா அவர்கள். தமிழீழ தேசம் போற்றி நிற்கும் உயர்ந்த மானிடனான சிறி அண்ணா அவர்கள் எமது தேசத்திற்காக ஆற்றிய பணிக்காக என்றும் எம் மக்களின் மனங்களில் நிலை பெற்றிருப்பார்.

இவரின் பணியில் இணைந்து பயணித்தவர்கள், நண்பர்கள், உறவுகள், இவரின் அன்புக்குரிய மனைவி, பிள்ளைகள் அனைவரோடும் இவரின் பிரிவுத் துயரைப் பகிர்ந்து கொள்கிறோம்.

 

SHARE