தமிழீழப் பிரகடணம் 50ம் ஆண்டு மக்கள் கொண்டாட்டம்

1

தமிழீழப் பிரகடன வீர வரலாற்றின் ஐம்பதாம் ஆண்டு எழுச்சி நிகழ்வு இன்று (10.05.2026) உணர்வுபூர்வமாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது. தமிழீழ தேசிய உணர்வை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கலை, இலக்கிய மற்றும் வரலாற்று நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. முன்னாள் போராளி கவிக்குயில் அவர்கள் பொதுச்சுடரை ஏற்றி நிகழ்வைத் தொடங்கிவைத்தார். தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழு வடமேற்கு பிராந்திய பொறுப்பாளர் திரு வசந்தன் அவர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழில் நடைபெற்ற சிற்றுரையில் திரு ரமேஷ் இந்திரா ராஜா அவர்கள் “வட்டுக்கோட்டை தீர்மானத்தின் தொடர்ச்சியும் வளர்ச்சியும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர் அனுஷ்யா முரளிதரன் ஆசிரியரின் குழுவினரால் வயலின் இசை நிகழ்ச்சி வழங்கப்பட்டது.

ஆங்கில உரையை செந்தூரன் அவர்கள் நிகழ்த்தியதுடன், “போராட்ட வரலாற்றில் சில துளிகள்” என்ற தலைப்பில் சிறுவர்கள் நால்வர் இணைந்து ஆங்கிலத்தில் உரையாற்றினர்.

நடன ஆசிரியர் திருமதி ரூபி குமார் அவர்களின் மாணவி செல்வி பூமிசா சிவகரனின் நடன நிகழ்ச்சியை தொடர்ந்து பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில் கார்த்திகா ரமேஷ் அவர்கள் உரையாற்றினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பொன்னகவை நினைவாக அனைத்து உலக தொடர்பகத்தினால் வெளியிடப்பட்ட “பொன்னகவை” இசைப் பேழை நிகழ்வில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த இசைப் பேழையில் இடம்பெற்ற பாடலுக்கு நடன ஆசிரியர் திருமதி ஷாமினி கண்ணன் அவர்களின் மாணவிகள் நடன நிகழ்ச்சியை வழங்கினர். இப்பாடலை திரு இ. தாஸ் அவர்கள் எழுதியிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் 50 ஆண்டுகால வரலாற்றுத் தடங்களை எடுத்துரைக்கும் கவி உரையும் நிகழ்வில் இடம்பெற்றது. மேலும், விடுதலைப் புலிகளின் மூத்த போராளி திரு அஜித் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

நடன ஆசிரியர் திருமதி சுகிர்தா ஆனந் அவர்களின் மாணவிகள் நடன நிகழ்ச்சிகளை வழங்கினர். தொடர்ந்து பறை இசை நிகழ்ச்சி இடம்பெற்றது.

இறுதியாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” பாடல் ஒலிவடிவில் ஒலிபரப்பப்பட்டதுடன், தமிழீழ தேசியக் கொடி கையேந்தப்பட்டு உறுதியுரை நிகழ்த்தப்பட்டது.

எழுச்சியுடனும் தேசிய உணர்வுடனும் நடைபெற்ற இந்நிகழ்வு நிறைவுற்றது.

Previous article17 ம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாள்