லெப். கேணல் புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 12 பேரின் 39ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு லண்டனில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது!

3

லெப்டினன் கேணல் புலேந்திரன், லெப்டினன் கேணல் குமரப்பா உள்ளிட்ட 12 பேரின் 39ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியாவின் ஏற்பாட்டில், இன்று (11.10.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு லண்டன் மிச்சம் (Mitcham) பகுதியில் அமைந்துள்ள Ascension Church Hall மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

நினைவு வணக்க நிகழ்வின் ஆரம்பமாகப் பொதுச்சுடரினை திருமதி கமலாவதி கந்தாங்கரன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியினை லெப். கேணல் புலேந்திரன் அவர்களின் புதல்வன் ஏற்றிவைத்தார்.

இதனையடுத்து ஈகைச்சுடரினை திருமதி ரஜனி அவர்கள் ஏற்றிவைத்தினை தொடர்ந்து திருவுருவப் படங்களுக்குத் திருமதி சுபாசினி அவர்கள் மலர்மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து மலர் வணக்கமும் தீப வணக்கமும் இடம்பெற்றது.

நினைவு வணக்க நிகழ்வின் தொடர்ச்சியாகக் கவிதைகள், நினைவுரைகள், சிற்றுரைகள் மற்றும் நடன நிகழ்வுகள் இடம்பெற்றன.

திரு. தாஸ் மற்றும் திரு. கிருபாகரன் கவிதையினை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து நாட்டியாலயா நடனப் பள்ளியின் ஆசிரியர் திருமதி ராகினி ராஜகோபால் மற்றும் ஆசிரியர் திருமதி ஷாமினி கண்ணன் அவர்களின் மாணவிகள் நடன நிகழ்வினை வழங்கினர்.

இதனையடுத்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு. நியூட்டன் அவர்கள் நினைவுரையாற்றினார் தொடர்ந்து திரு. கணேசலிங்கம் சூரியகாந்தன் அவர்கள் சிற்றுரையாற்றினார்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றுவதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த மல்லை இலக்கிய மன்றத்தைச் சேர்ந்த திரு. மல்லை சத்யா அவர்கள் சிறப்புரையாற்றினார்.

நிகழ்வின் இறுதியில் ‘நம்புங்கள் தமிழீழம்’ பாடல் ஒலி வடிவில் ஒலிக்கப்பட்டதுடன், தமிழீழத் தேசியக்கொடி கையேந்தப்பட்டு  உறுதிமொழியுடன் 39ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நிறைவுபெற்றது.

Previous article2ஆம் லெப். மாலதியின் 39ஆம் ஆண்டு நினைவேந்தலும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும்!