தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாளும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும், பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் 10.10.2026 சனிக்கிழமை அன்று ஹரோ பகுதியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பமாக, நிதர்சனம் பொறுப்பாளர் மற்றும் முன்னாள் போராளியுமாகிய செல்வி கஜானி அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, பிரித்தானியத் தேசியக் கொடியினை மக்களவையைச் சேர்ந்த திருமதி அஞ்சலி ரமணன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
தமிழீழத் தேசியக் கொடியினை பிரித்தானியத் துணைப் பொறுப்பாளரும் அனைத்துலக மகளிர் பொறுப்பாளருமான ஆரபி மணியரசன் அவர்கள் ஏற்றி வைத்தார்.ஈகைச்சுடரினை லெப். கேணல் மனோஷ் அவர்களின் சகோதரரும் மாவீரர் பணிமனை பொறுப்பாளருமான திரு கமல் அவர்கள் ஏற்றி வைத்தார்கள்
2ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் திருவுருவப்படத்திற்கு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மகளிர் செயற்பாட்டாளர் ஜெயா அவர்களும், தமிழ் இளையோர் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் கலையரசி மணியரசன் அவர்களும் மலர் மாலை அணிவித்தார்கள்.
இதனைத் தொடர்ந்து, தமிழீழப் பெண்களின் வரலாற்றுப் பங்களிப்பை நினைவுகூரும் எழுச்சி உரைகள், நடன நிகழ்வுகள் மற்றும் சிறுவர்களின் ஆங்கில உரைகள் என்பன இடம்பெற்றன.
மேலும், பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் மகளிர் பிரிவினரினால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு வெற்றிக் கேடயங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
தமிழீழப் போராட்ட வரலாற்றில் பெண்கள் ஆற்றிய பங்களிப்பையும், அவர்களின் துணிவு, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பையும் நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வுகள் அமைந்திருந்தன.
நிகழ்வின் நிறைவாக, “நம்புங்கள் தமிழீழம்” பாடல் ஒலிவடிவில் ஒலிக்கப்பட்டதுடன், தேசியக் கொடிகள் கையேந்தப்பட்டதுடன் , மாவீரர்களின் வழி நடப்போமென்று உறுதி மொழியோடு நிகழ்வானது நிறைவு பெற்றது.











