முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி அவர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்.
10.10.1987 அன்று யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் இந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்த நிலையில் ‘சயனைட்’ உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி உட்பட அதே சம்பவத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2ம் லெப். கஸ்தூரி, வீரவேங்கை தயா, வீரவேங்கை ரஞ்சினி,வீரவேங்கை அன்ரன் ஆகிய மாவீரர்களின் 36ம் ஆண்டு வீரவணக்க நாளையும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளையும் நினைவு கூர்ந்த வணக்க நிகழ்ச்சியானது நேற்றைய தினம்
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் ஹரோ பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்ச்சியாக பிரித்தனிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மகளிர் துறைப் பொறுப்பாளர் திருமதி தேவராசா தேவதர்சினி அவர்கள் பொதுச் சுடரினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்கள்.
தமிழீழத் தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்பு குழு வடமேற்கு பிராந்திய மாவீரர் பணிமனை துணைப் பொறுப்பாளர் திருமதி மாதுமை லோகேஸ்வரன் ஏற்றிவைத்தார்கள்.
ஈகைசுடரினை மாவீரர் லெப் அழகு இயற்பெயர் கருணானிதி வந்தியதேவன் அவர்களின் சகோதரி திருமதி கங்கேஷ்வரி உதயமூர்த்தி அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
அகவணக்கத்தினைத் தொடர்ந்து திரு உருவப் படத்திற்கான மலர்மாலையினை தாயக விடுதலைப் போரிலே இறுதிவரை களத்தில் நின்ற திருமதி ஆரபி மணியரசன் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமேற்க்குப் பிராந்திய மகளிர் துறைப் பொறுப்பாளர் திருமதி வசந்த குமாரி சிவசூரியன் அவர்களும் இணைந்து அணிவித்தார்கள்.
தொடர்ந்து நினைவு உரை, கவிதை நடனம் உள்ளடங்கலாக கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன. தொடர்ந்து அனைத்துலகத் தொடர்பகத்தால் ஜேர்மனியில் நடாத்தப்பட்ட 10 நாடுகள் பங்குபற்றிய மாவீரர் உலக கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் லண்டனில் இருந்து பங்கு பற்றிய வீரர், வீராங்கனைகளுக்கான மதிப்பளிப்பானது நடைபெற்றது.
இறுதியாக நம்புங்கள் தமிழீழம் என்ற பாடல் எழுச்சியோடு பாடி நிற்க,
தேசியக் கொடி கையேந்தலுடன், மாவீரர் கனவு நனவாக நாம் அனைவரும் பயணிப்போம் என்ற உறுதியேற்போடு நிகழ்வானது நிறைவடைந்தது.






































