தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2026 – London Excel

11

*அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகளே!*

வணக்கம்!

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக லண்டன் ExCeL மண்டபத்தில் நடைபெற்று வந்த தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை, இவ்வாண்டும் அதே மண்டபத்தில் நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

இவ்வாண்டு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மண்டப ஒதுக்கீடு தொடர்பான சிக்கல்கள் காரணமாக, நினைவேந்தல் நிகழ்வுகளை ஐந்து பிராந்தியங்களில் நடாத்துவதற்கான தீர்மானத்தை 07.11.2026 அன்று அறிவித்திருந்தோம்.

எனினும், தமிழீழத் தேசிய மாவீரர் நாளை வழமைபோன்று ஒரே மண்டபத்தில், அதன் தனித்துவமும் மாண்பும் குன்றாது நடாத்த வேண்டும் என்ற உறுதியுடன் எமது முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்தோம்.

*மாவீரர்களின் தியாகமும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையும் எம்மை வழிநடத்த, மேற்கொள்ளப்பட்ட விடாமுயற்சிகளின் பயனாக, லண்டன் ExCeL மண்டபத்திற்கான ஒப்பந்தம் தற்போது இறுதியாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.*

எனவே, முன்னர் அறிவிக்கப்பட்ட ஐந்து பிராந்தியங்களுக்கான மாற்று ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என்பதையும், தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2026 நினைவேந்தல் நிகழ்வு வழமைபோன்று லண்டன் ExCeL மண்டபத்திலேயே நடைபெறும் என்பதையும் உறுதிப்படுத்துகின்றோம்.

*நாள்: வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2026*

*ExCeL London, பிரித்தானியா*

அன்பான தமிழ் உறவுகளே!

ஏற்பட்ட இடைக்கால மாற்றங்களைப் புரிந்துகொண்டு, பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

*தடைகள் வந்தபோதும் எமது உறுதி தளரவில்லை!*

*மாவீரர்களின் நினைவுகளும் அவர்களுக்குச் செலுத்தும் மரியாதையும் என்றும் மாறாது!*

கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் அனைவரும் ஒன்றிணைந்து, உரிய மாண்புடனும் வணக்கத்துடனும் பேரெழுச்சியுடனும் நடைபெறும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்

நன்றி.

*தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா*

*13.11.2026*

Screenshot
Previous articleலெப். கேணல் புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 12 பேரின் 39ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு லண்டனில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது!