பிரித்தானியா லெஸ்ரர் மாநகரத்தில் தமிழர் விளையாட்டு விழா மிகச் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் தமிழர் நலன்புரிச்சங்கம் லெஸ்ரர் முன்னெடுத்த தமிழர் விளையாட்டு விழா யூன் 24ம் நாள் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது. பொதுச் சுடரினை ஸ்ரொக் ஒன் ரெறன்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வசந்தன் ஏற்றி வைத்தார். பிரித்தானியக் கொடியை தமிழ்க் கல்விக்கூடத்தின் பழைய மாணவியும் இன்று பிரித்தானிய சுகாதார சேவையில் வைத்தியராகக் கடமையாற்றும் Dr. திருசிகா செல்வராசா ஏற்றி வைக்க தமிழீழத் தேசியக்கொடியை தமிழர் நலன்புரிச்சங்கத்தின் தலைவியும் விடுதலை வீரனின் சகோதரியுமான திருமதி சௌபாக்கியவதி சூரியகுமார் ஏற்றி வைத்தார். அகவணக்கத்துடன் காலை 10மணிக்கு மென்பந்து துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், கால்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமானது.
12மணிக்கு மங்கள விளக்கேற்றப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் வரவேற்பு நடனத்துடன் தடக்களப் போட்டிகள் ஆரம்பமானது.
லெஸ்ரர் கிழக்கு பாராளுமன்ற உறுப்பினரும் லெஸ்ரர் மாநாகர உறுப்பினர்களும் கலந்து விளையாட்டு விழாவைச் சிறப்பித்தனர். அயல் மாவட்டங்களில் இருந்து பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டது மேலதிக சிறப்பாக அமைந்தது.
வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பதக்கங்களும் கேடயங்களும் வழங்கப்பட்டது. தமிழர் நலன்புரிச்சங்கச் செயலாளர் திருமதி மேரி ஜெனிற்றா ராஜ்குமார் அவர்களின் நன்றியுரையோடு தேசியக் கொடிகள் கையேந்தப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலோடு விழா இனிதே நிறைவடைந்தது.





















