விடுதலை என்ற மாபெரும் குடும்பத்தின் மூத்த தலைமகனாக, பிதாமகனாக மூன்று தசாப்தங்களாக விடுதலைப் பயணத்தில் தன்னை இணைத்து அரசியல் ரீதியாக இலட்சிய உறுதியோடு பயணித்த பாலா அண்ணரை தேசியத் தலைவர் அவர்கள் தேசத்தின் குரல் என்று மதிப்பளித்திருந்தார். 2006ம் ஆண்டு அன்று சுகவீனம் காரணமாக சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 17ம் ஆண்டு நினைவு எழுச்சி வணக்க தினம் இன்று பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரின் ஏற்பாட்டில் விம்பில்டன் பகுதியில் இடம்பெற்றது.
நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் தென்மேற்கு நீண்ட நாள் செயற்பாட்டாளர் துரை ராஜா யோகேஸ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். தமிழீழ தேசியக்கொடியினை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் மகளிர் பொறுப்பாளர் தேவராஜா தர்சினி அவர்கள் ஏற்றிவைத்தார்கள். ஈகைச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்பு வடமேற் மகளிர் பொறுப்பாளர் வசந்தகுமாரி சிவசூரியன் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். திருவுருவப்படத்துக்கு மலர்மாலையினை மாதுமை ராஐதுரை மற்றும் ஜென்சிகா நீயூட்டன் அவர்கள் அணிவித்ததை தொடர்ந்து பொதுமக்களால் வணக்கம் செலுத்தப்பட்டது.











