தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2026 பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு

1

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய பிரித்தானியத் தமிழ் உறவுகளே!

வணக்கம்!

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, லண்டன் எக்ஸெல் (ExCeL) மண்டபத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தொடர்ந்து நடாத்தி வந்துள்ளோம்.

ஆனால், இவ்வாண்டு எக்ஸெல் மண்டப நிர்வாகம் எதிர்பாராத விதமாக எமக்கு மண்டபத்தை வழங்க மறுத்துள்ளது. இதற்காக அவர்கள் முன்வைத்துள்ள காரணங்கள் வலுவானவை அல்ல என நாம் கருதுகின்றோம். மேலும், இது தொடர்பாக அவர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குப் பலமுறை முயற்சித்தபோதும், அதற்கான வாய்ப்பை வழங்க மறுத்து, காலத்தை இழுத்தடித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை வழமைபோன்று ஒரே பெரிய மண்டபத்தில் நடாத்த வேண்டும் என்ற நோக்கில், மாற்று ஏற்பாடாகப் பல்வேறு பெரிய மண்டபங்களைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டோம்.

எனினும், அவ்வாறான பெரிய மண்டபங்களைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான நடைமுறைகள், அனுமதிகள் மற்றும் முன்பதிவுகளை உறுதிப்படுத்துவதற்குக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகின்றது.

இன்று, 07.11.2026 என்ற நிலையில், தமிழீழத் தேசிய மாவீரர் நாளுக்கு இன்னும் 20 நாட்களே எஞ்சியுள்ளன.

இவ்வளவு குறுகிய காலப்பகுதிக்குள், நடைமுறைச் சாத்தியமற்ற முயற்சிகளில் ஈடுபட்டு, இறுதி நேரத்தில் மக்களை ஏமாற்றத்திற்கும் குழப்பத்திற்கும் உள்ளாக்குவதை நாம் விரும்பவில்லை.

அதேவேளை, கடந்த ஆண்டுகளைப் போலவே, தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இவ்வாண்டும் எவ்விதத் தடையுமின்றி, உரிய மாண்புடனும் வணக்கத்துடனும் சிறப்புடனும் நடைபெற வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

எனவே, தற்போதைய சூழ்நிலைகள், எஞ்சியுள்ள கால அவகாசம் மற்றும் நடைமுறைச் சாத்தியங்கள் ஆகியவற்றைக் கவனமாக ஆராய்ந்து, இவ்வாண்டு தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளைப் பிராந்திய ரீதியாக ஐந்து வெவ்வேறு இடங்களில் சிறப்பாக நடாத்துவதெனத் தீர்மானித்துள்ளோம்.

அன்பான தமிழ் உறவுகளே!

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, நீங்கள் அனைவரும் எவ்வாறு எக்ஸெல் மண்டபத்திற்கு வருகை தந்து, மாவீரர்களை நினைவுகூர்ந்து, மலர்வணக்கம் செலுத்தி, உணர்வுபூர்வமாக உங்கள் மாண்புடனும் வணக்கத்துடனும் வெளிப்படுத்தி வந்தீர்களோ, அதே உணர்வுடனும் அதே மாண்புடனும் வணக்கத்துடனும் இம்முறையும் உங்கள் பிராந்தியங்களுக்கு அருகிலுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த மாற்றம் எமது விருப்பத்தினால் ஏற்பட்டதல்ல. எதிர்பாராத சூழ்நிலைகளும், எமக்குக் கிடைத்துள்ள மிகக் குறுகிய கால அவகாசமுமே இத்தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு எம்மை இட்டுச் சென்றுள்ளன என்பதை அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றோம்.

மண்டபம் மாறலாம்!

நிகழ்வு நடைபெறும் இடங்கள் மாறலாம்!

ஆனால், எமது நினைவுகளும் மாவீரர்களுக்குச் செலுத்தும் மரியாதையும் என்றும் மாறாது!

இது நிகழ்வு நடைபெறும் இடங்களில் ஏற்பட்ட மாற்றமே தவிர, எமது நினைவேந்தல் உணர்வில் ஏற்பட்ட மாற்றமல்ல.

எனவே, தற்போதைய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, கடந்த காலங்களைப் போலவே இவ்வாண்டும் உங்கள் முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குமாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி.

வெகு விரைவில் ஐந்து பிராந்தியங்களில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நடைபெறும் இடங்கள் விபரங்கள் உங்களுக்கு அறியத் தரப்படும்.

Screenshot
Screenshot

 

Previous articleலெப். கேணல் புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 12 பேரின் 39ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு லண்டனில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது!