தமிழர் விளையாட்டு விழா லெஸ்ரர் பிரித்தானியா
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரனையுடன் தமிழர் நலன்புரிச் சங்கம் லெஸ்ரர் நடாத்திய தமிழர் விளையாட்டு விழா 29/06/2024 சனிக்கிழமை காலை 10மணிக்கு எமது பாரம்பரிய பறை இசை முழங்க பிரதம விருந்தினர்கள் வரவேற்புடன் கோலாகலமாக ஆரம்பமானது.
பிரதம விருந்தினர்கள் வரவேறப்பைத் தொடர்ந்து பிதமவிருதினரகள், சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தனர். எமது இளைய தலைமுறையினரான சொளமியன் பவித்ரன், கபிஷன் சிவறூபன் பிரித்தானியத் தேசியக்கொடியை ஏற்றி வைக்க, விசுவமடுவில் சிறிலங்கா தரப்பு இராணுவத்துடன் நடந்த சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட இம்றான் பாண்டியன் படையணியைச் சேர்ந்த மாவீரர் மேஐர் இளந்தீரனின் சகோதரன் சன்முகநாதன் கௌதீபனுடன் அசோகுமாரும் சேர்ந்து எமது தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர். தமிழர் நலன்புரிச் சங்கத்துக்கான கொடி முதற் தடவையாக கம்பிரமாகச் சங்கத்துக்கான பாடலும் இசைக்க சங்கத்தின் தலைவி ஜெகதா மணிவண்ணனால் ஏற்றி வைக்கப்பட்டது. சங்கத்தின் பொருளாளர் மரியதாஸ் சுரேஷ்குமார் சங்கத்தின் கொடி ஏற்றுவதற்கு உதவியாக இருந்தார்.
அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டு விழா தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து சங்கத்தின் தலைவி ஜெகதா மணிவண்ணனின் வரவேற்புரையுடன் தொடர்ந்தது. அணிநடை, நாட்டிய அணிநடையோடு ஒலிம்பிக் தீபத்தை தாங்கிய வீரர்கள் வீராங்கனைகள் மைதானத்தை வலம் வந்து ஒலிம்பிக் தீபத்தை ஏற்றியதோடு விளையாட்டுகள் ஆரம்பமாகியது.
சிறுவர்கள், பெரியவர்களின் தடகள விளையாட்டுகள், கரப்பந்தாட்டம், உதைபந்தாட்டம், துடுப்பாட்டம் போன்ற விளையாட்டுக்களோடு கயிறிழுத்தல், சங்கீதக் கதிரை போன்ற மகிழ்வூட்டும் விளையாட்டுகளும் இடம்பெற்றது.











